Huawei Story: ஒரு தொழில்நுட்பக் கம்பனியும், பிளவுபடும் உலக அரசியலும்

MALAYSIA-HUAWEI-LOGO

ஒருகதை. இது இராணுவ பொறியியலாளன் பற்றியது.

அவன் தேசப்பற்று மிக்கவன். மேலைத்தேய சமூகத்தின்; உழைப்புச் சுரண்டல் பற்றி அறிந்தவன்.

அவனது தேசத்தில் உடல் உழைப்பைத் தரக்கூடிய தொழிலாளிகள் அதிகம். அதுவே அங்கு மேலைத்தேய சமூகம் கூடுதல் தொழிற்சாலைகளை அமைக்கக் காரணம் என்பது தெரியும்.

மேற்குலகக் கம்பனி ஒரு பொருளைத் தயாரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கம்பனி பொருளை வெவ்வேறு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளும்.

அந்தப் பாகங்களை உற்பத்தி செய்யும் பொறுப்பு அவனது தேசத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும். ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்வதை மற்றைய தொழிற்சாலை அறியாது.

பின்னர், அவனது தேசத்திலுள்ள வெவ்வேறு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அந்தக் கம்பனி தனது நாட்டுக்கு தருவிக்கும். பின்னர் அவற்றை ஒன்றாக்கி முழுமைப்படுத்தும்.

இந்தத் திட்டத்தின் சூட்சுமம் வேறொன்றும் அல்ல. அந்தப் பொருளைத் தயாரிக்கும் வித்தையை மற்றவர்கள் கற்றுக் கொண்டு முன்னேறி விடக்கூடாது என்ற ஆதங்கம் தான்.

அந்த சூட்சுமத்தை நமது கதாநாயகன் அறிந்தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டான். தமது வேட்கையை அரசுக்கு வெளிப்படுத்தினான்.

மேற்குலகில் பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கினான். அதனைப் பாகம் பாகமாக பிரித்து ஆராய்ந்தான். அது எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அறிய முயன்றான்.

இந்த (Reverse Engineering) பொறிமுறையின் மூலம் ரகசியங்கள் அம்பலமாகின. இனிமேல் நானே உற்பத்தி செய்கிறேன் என்று அரசாங்கத்திடம் கூறினான்.

அவனது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்தது. அவனுக்குத் தேவையான உதவிகளை வழங்கியது. தமது நாட்டுக்குத் தேவையானதை தயாரிக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தது.

மேற்குலகம் வகுத்திருந்த ‘அறிவு என்னிடம், உழைப்பு உன்னிடம்‘என்ற விதியை மாற்றினான் ‘அறிவுடன் உழைப்பும் என்னிடம், உயர்வதற்குத் தடையில்லை‘ என்பதை நிரூபித்தான்.

அவனது உற்பத்திகள் பெருகின. தரம் மேலோங்கியது. உற்பத்திகளை உலகநாடுகள் போட்டி  போட்டுக் கொண்டு வாங்கின. அவனது சாம்ராஜ்யம் விஸ்தாரம் அடைந்தது.

இன்று அவனது உற்பத்திகள் இல்லாத நாடுகள் இல்லை என்ற நிலை. அந்த உற்பத்திகள் இல்லாவிட்டால் நாடுகள் முடங்கிவிடும் நிலையும் கூட.

இது சீனாவைச் சேர்ந்த ஹூவாவே நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் ரெங் ஸெங்பே என்பவரது கதை. இது சர்வதேச அரசியல் பேசுபவர்கள் அதிகம் அறிந்திராத கதை.

Huawei Founder

* * * * *

அடுத்து இன்னொரு கதை. இதுவொரு பெண்மணி பற்றியது.

பெண்ணின் பெயர் மெங் வான்ஸூ. இவர் வான்கூவர் விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமான நிலையத்தில் ஏற முனைகிறார்.

கனேடிய பொலிஸார் திடுதிப்பென விமான நிலையத்திற்குள் நுழைகிறார்கள். வான்ஸூவைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.

கனேடிய அரசாங்கம் விளக்கம் அளிக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால் வான்ஸூவைக் கைது செய்ததாக கனேடிய உட்துறை அமைச்சர் கூறுகிறார்.

டிசம்பர் முதலாம் திகதி கைது செய்யப்பட்ட வான்ஸூ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் நீதிபதியிடம் கேட்கிறார்கள்.

நீதிமன்றில் வாதப் பிரதிவாதங்கள். வான்ஸூவை நாடு கடத்துமாறு அமெரிக்கா முன்வைத்த கோரிக்கை பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் விளக்கிக் கூறப்படுகின்றன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் பிரச்சனை. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதனை மீறியதாக வான்ஸூ மீது குற்றஞ்சுமத்தப்படுகிறது.

இந்தப் பெண் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக சீனாவிலும் பல கைதுகள். கனடாவைச் சேர்ந்த முன்னாள் ராஜதந்திரியும், வர்த்தகப் பிரமுகரும் கைதாகிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர நெருக்கடிகள், அமெரிக்க – சீன வர்த்தக உறவுகளிலும் எதிரொலிக்கத் தொடங்குகிறது.

சீனாவில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். சீன அரசு கனேடியத் தூதுவரை வரவழைத்து, இது அராஜகம் என்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குரலாக ஒலிக்கும் பத்திரிகைகள் அமெரிக்காவை சாடுகின்றன. இதன்மூலம் வர்த்தகப் போர் தீவிரம் பெறும் என எச்சரிக்கின்றன.

சீனத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தக சமரச முயற்சிகள் பற்றி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வான்ஸூ கைதானதை அவை சுட்டிக்காட்டுகின்றன.

இன்று வான்ஸூ என்ற பெண்மணியின் கைது நான்கு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது.

இந்த வான்ஸூ என்பவர் வேறு யாருமல்ல. ஹூவாவே நிறுவனத்தின் பிரதம நிதிஅதிகாரி. முன்னைய கதையின் கதாநாயகர் ரெங் ஸெங்பேயின் புதல்வி.

Founders daughter

* * * * *

இனி இரு கதைகளையும் தொடர்புபடுத்திப் பேசலாம்.

வான்ஸூவின் கைது தீவிர சர்வதேச சர்ச்சையாகப் பரிணமித்துள்ளதாயின், அதற்கு அரசியல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. அதற்குப் பல பரிமாணங்கள் இருக்கலாம்.

மூன்று பரிமாணங்கள் முக்கியமானவை. தொழில்நுட்ப ரீதியிலான ஆதிக்கம் முதன்மையானது. அதனுடன் பாதுகாப்பையும் தொடர்புபடுத்தலாம். மூன்றாவது விடயம் வர்த்தகப் போட்டி.

ஹூவாவே நிறுவனம் தொலைத் தொடர்பாடல் சாதனங்களுக்காக பிரசித்தி பெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஹூவாவே உற்பத்திகளையே பயன்படுத்துகின்றன.

குறிப்பாக, இணைய வலைப்பின்னல்களிலும், கையடக்கத் தொலைபேசி சேவை வலைப்பின்னல்களிலும் ஹூவாவே நிறுவன உற்பத்திகளைத் தவிர்க்க முடியாது.

இந்நிறுவனம் 170 நாடுகளுக்கு உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்குகிறது. உலகின் மிகப் பெரிய தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள் ஹூவாவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன.

தகவல் தொலைத்தொடர்பாடல் கோலோச்சும் நவீன உலகில் ‘பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள கம்பனியாக’ ஹூவாவே பரிணமித்துள்ளது என்பதே உண்மை.

Huawei Facts

அடுத்து பாதுகாப்பு என்ற விடயத்தை ஆராய்வோம். இது தகவல்களைப் பாதுகாப்பதுடனும், ஊடுருவிப் பெறுதலுடனும் தொடர்புடையதாகும்.

இன்றைய உலகில் தகவல்கள் டிஜிற்றல் வடிவில் சேமிக்கப்படுகின்றன. வலைப்பின்னல்கள் ஊடாகத் தகவல்களைப் பெறமுடியும்.

உலக நாடுகளின் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையவழி தகவல் பரிமாற்றத்திற்காக ஹூவாவே தொலைத்தொடர்பாடல் கருவிகளையே பயன்படுத்துகின்றன.

உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொள்ளலாம். இங்குள்ள தொலைபேசிச் சேவை நிறுவனங்கள் ஹூவாவே கருவிகளைத் தவிர்த்துவிட்டு இயங்க முடியாது.

இங்குதான் பிரச்சனை இருப்பதாக மேற்குலகம் கூறுகிறது. ஹூவாவேயின் கருவிகளைப் பயன்படுத்தி, தகவல்களைத் திருடவோ உளவு பார்க்கவோ முடியுமென வாதம் புரிகிறது.

இது தொடர்பில், பல நாடுகளைச் சேர்;ந்த நீதிமன்றங்களில் ஹூவாவே நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், எங்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

அடுத்து வர்த்தகம் பற்றிப் பேசலாம். தொலைத்தொடர்பாடல் கருவிகளின் உற்பத்தியில் கோலோச்சும் ஹூவாவே, திறன்பேசி உற்பத்தியிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது.

இன்றைய உலகில் அதிகளவு திறன்பேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் சம்சங்கிற்குத் தான். அப்பிள் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் ஹூவாவே படிப்படியாக முன்னேறி மூன்றாம் இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அது அப்பிளைத் தாண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இன்று இணைய, கணினி, செல்போன் சேவை வலைப்பின்னல்களில் ஆழ வேரூன்றியிருக்கும் சீனக் கம்பனி. அது திறன்பேசி சந்தையையும் ஆக்கிரமித்தால் அமெரிக்கா சகிக்குமா?

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே, ஹூவாவே நிறுவன ஸ்தாபத் தலைவரது மகளின் கைது.

இந்தக் கைதினை தனியொரு சம்பவமாகப் பார்க்க முடியாது. இதற்கு முன்னரும் ஹூவாவேயை இலக்காக வைத்து பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவுஸ்திரேலியாவில் 5-ஜி தொழில்நுட்பத்திற்கான வசதிகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஹூவாவே பங்கேற்க முடியாதென அவுஸ்திரேலியா தடை விதித்தது.

அதனைத் தொடர்ந்து, 5-ஜி தொழில்நுட்ப வலைப்பின்னலில் ஹூவாவே கருவிகள் இருக்கக்கூடாது என நியூசிலாந்து அரசாங்கமும் உத்தரவிட்டது.

பிரிட்டனின் பீரி குழுமமும் தொலைத்தொடர்பாடல் வலைப்பின்னல்களில் இருந்து ஹூவாவே கருவிகளை அப்புறப்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஹூவாவேயின் பிரசன்னம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப ஆணையாளர் கூறுகிறார்.

 

Huawei Reach

இந்நாடுகள் ஹூவாவே மீது அச்சம் கொள்ள முக்கியமான காரணம் உண்டு. ஹூவாவே வேறு சீன அரசாங்கம் வேறு அல்ல என்ற உண்மை.

ஹூவாவே அறிந்த விடயங்கள் சீனா அரசுக்குத் தெரியாமல் போகாது. ஹூவாவே ஊடாக சீன அரசு வேவு பார்க்கலாம் என்ற சந்தேகமும் அவற்றுக்கு உண்டு.

இதிலுள்ள பிரச்சனை யாதெனில், ஹூவாவே பற்றி சந்தேகம் வெளியிட்டாலும், தமது சந்தேகம் சரியானது என மேற்குலக நாடுகளால் நிரூபிக்க முடியாதிருப்பது தான்.

வேறொன்றும் செய்ய முடியாது. அரசியல் வழியில் மோதிப் பார்ப்போம் என்று நினைத்தே அமெரிக்க அதிகாரிகள் வான்ஸூவை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இது அரசியல் நோக்கம் கொண்டது தான். அதில் சந்தேகம் கிடையாது. எனினும், வான்ஸூவின் கைது அரசியலைத் தாண்டி பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வான்ஸூ மீதான நீதிமன்ற விசாரணைகள் நாளை மீண்டும் ஆரம்பமாகின்றன. தனது சட்ட திட்டங்களைப் பயன்படுத்தி அவரை அமெரிக்கா சிறையில் அடைக்கவும் கூடும்.

இத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் சீன மக்களையும், அரசாங்கத்தையும் ஆத்திரப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

சீன மக்கள் ஹூவாவேயை மேற்குலக உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போட்டியில் தமது வெற்றியின் சின்னமாகப் பார்க்கிறார்கள்.

இந்தக் கம்பனியை தனியார் கம்பனிக்கு அப்பால் அறிவார்ந்த உழைப்பிற்குக் கிடைத்த உணர்வுபூர்வமான வெற்றியின் சின்னமாகக் கருதுகிறார்கள்.

இன்று அரசியல் காரணங்களால் அமெரிக்காவும், சீனாவும் இரு முனைகளாகப் பிளவுபட்டுள்ளன. ஹூவாவே விவகாரம் பிளவை மென்மேலும் ஆழமாக்கக்கூடும்.

இது அரசியல் தாண்டி சட்டம், தொழில்நுட்பம், வர்த்தகம் முதலான துறைகள் சார்ந்தும் உலகை இரண்டாக பிளவுபடக்கூடிய சாத்தியத்தை ஏற்படுத்தலாம்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியான கட்டுரையின் இணைய வடிவம்

Advertisements

About sadeeshkrishnapillai

A radio journalist who works for state radio of Sri Lanka. Much interested in sharing what I learned on world affairs through a political analytical column of a largest selling Tamil weekly in the island.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s