மியன்மாரில் ஜனநாயகம்: மாயையா? யதார்த்தமா?

By Sadeesh Krishnapillai

ஜனநாயக மாற்றம் கோரி மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள்: படஉதவி: சீஎன்என்-பிலிப்பைன்ஸ்

ஜனநாயகம் மலிவானது அல்ல. அது இலகுவில் கிடைத்து விட மாட்டாது.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம், மியன்மார். அங்கு ஜனநாயகம் எட்டாக்கனியாகவே நீடிக்கிறது.

உலகப் போரில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியில் சிக்கித் தவித்த தேசம். பிரிட்டன் காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தால் சிவில் யுத்தங்களை எதிர்கொண்டு சீரழிந்த நாடு.

பௌத்தத்தை அரசியலாக்கி அதன் மகோன்னதக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி, சிறுபான்மை மக்களை ஒடுக்க முனைந்த அரசியல் தலைவர்களையும், இராணுவ மேலதிகாரிகளையும் கொண்ட தேசம்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தல் ஜனநாயகத்தின் விடிவெள்ளியாக வர்ணிக்கப்படுகிறது. தேர்தலின் பெறுபேறுகளை இல்லாதொழிக்கும் பெப்ரவரி இராணுவ சதிப்புரட்சி ஜனநாயகத்தின் முற்றுப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும், ஏதோவொரு நம்பிக்கை. வெகுஜன கிளர்ச்சியும்இ ஒத்துழையாமை இயக்கமும் இராணுவ ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையைத் தோற்கடித்துஇ இல்லாத ஜனநாயகத்தை சாத்தியப்படுத்தி விடும் என்ற ஆதங்கம். இதுவொரு மாயையா? யதார்த்தமா?

1948 இல் பிரிட்டனிடம் இருந்து பர்மா சுதந்திரம் பெறுகையில், தமது தேசத்தின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிந்தனை அப்போதைய தலைவர்களிடம் இருந்தது.

பிரிட்டனின் காலனித்துவத்திற்கு முற்பட்ட மன்னராட்சிக்கு திரும்ப வேண்டுமா, அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி முறையை உருவாக்க வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ந்தார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகமே பொருத்தமானதென ஆங் சான் உள்ளிட்ட புரட்சிகரத் தலைவர்கள் தீர்மானித்தனர். துரதிருஷ்டவசமாக பர்மீய தேசியவாதமும், மதரீதியான கடும்போக்குவாதமும் செல்வாக்கு செலுத்தி ஜனநாயகம் நோக்கிய பயணத்தை முடக்கியிருந்தன.

இன்று இராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ள சூக்கி அம்மையாரின் தந்தையே ஆங் சான். சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர். மேற்குலக பல்கலைக்கழங்களில் கற்றவர். மேலைத்தேய அரசியல் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டு. சோஷலிஸம், மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டவர்.

ஆங் சானும், அவரது மகளான சூக்கியும் (இடப்புறத்தில் உள்ள கைக்குழந்தை) குடும்பத்தவருடன்

இவர் சுதந்திர பர்மாவை வழிநடத்துவதற்காக உருவாக்கிய அமைப்பு பாசிஸத்திற்கு எதிரான மக்களின் சுதந்திர லீக் என்பதாகும். இது லிபரல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தது. ஆட்சி நிர்வாகமும் மதமும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று எண்ணியது.

இவ்வமைப்பிற்கு மிகச்சவாலாக இருந்த விடயங்களில் முதன்மையானது, தேசிய ஒருமைப்பாடாகும். பர்மாவின் சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் சிறுபான்மை மக்கள். இவர்களுக்கு பிரிட்டன் ஆட்சிகாலத்தில் சிறப்பு அந்தஸ்து இருந்து.

சுதந்திரத்திற்குப் பின்னர், ஒரு சமஷ்டி ஆட்சிக் கட்டமைப்பின் மூலம் இந்த மக்களுக்கு சுயநிர்ண உரிமை வழங்குவது பற்றிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இவை நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மை மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை உள்நாட்டு யுத்தங்களுக்கு வழிவகுத்தன.

சுதந்திர பர்மீய தேசத்தின் தலைவர்கள் உள்நாட்டு யுத்தத்திற்குரிய காரணங்களை ஆராய்ந்து, தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தேசியவாதத்திற்கு இடமளித்து பௌத்ததிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை பற்றியே அவர்கள் சிந்தித்தனர். முதலாவது அரசியல் யாப்பில் மதச்சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டாலும், பௌத்தத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

தேசியவாதமும், மதரீதியான கடும்போக்குவாதமும் நிறுவனமயப்படுத்தப்பட்ட போலி ஜனநாயக ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில், சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு இடமேது? சிறுபான்மை மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் சமூகத்தில் எவ்வாறு ஒருமைப்பாட்டின் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்?

இதற்கு சமகால உதாரணம் ஆங் சான் சூக்கி. சமாதானத்திற்கான நொபெல் பரிசை வென்றவராக இருந்தாலும், ஜனநாயகப் போராட்டத்தின் பிம்பமாக வர்ணிக்கப்பட்டாலும், ரொஹிஞ்ஜிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறையில் மௌனம் காத்தவர்.

ரொஹிஞ்ஜிய அகதிகளும், சூக்கியின் பாராமுகமும்

தமது நலன்களை நிறைவேற்றக்கூடிய பிரதிநிதியாகக் கருதும் மேற்குலகம், சூக்கி அம்மையாருக்கு அதீத முக்கியத்துவம் அளிப்பதென்னவோ உண்மையே. ஆனாலும், சிறுபான்மை மக்களையும் உள்ளடக்கி தேசிய மட்டத்திலான புரட்சியின் மூலம் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக சகல மக்களையும் கிளர்ந்தெழச் செய்யும் அரசியல் சக்தியாக அவர் இல்லை.

இன்றைய காலகட்டத்திலும், மியன்மாரில் ஜனநாயகம் என்றால், அது ஆங் சான் சூக்கி தான் என்று விளம்பரப்படுத்தும் போக்கு தொடர்கிறது. அந்தப் பெண்மணி விடுதலை செய்யப்பட்டால் மியன்மார் மீது தடை நீக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டால் மீண்டும் தடைகள் விதிக்கப்படுகின்றன.

மியன்மாரின் உண்மையான பிரச்சனை, அதன் அரசியல் யாப்பு தானென்பது புரிந்து கொள்ளப்படுவது கிடையாது. அந்த யாப்பு ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கால்வாசி ஆசனங்களில் அமருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் இராணுவத்திடம் இருக்குமாயின், அங்கு எவ்வாறு ஜனநாயகம் நிலைக்க முடியும்?

பாதுகாப்பு அமைச்சு, உட்துறை அமைச்சு உள்ளி;ட்ட முக்கியமான அமைச்சுக்களும், எல்லைப்புற பிரதேசங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்குமாயின், ஆங் சான் சூக்கி அம்மையார் விரும்பினால் கூட, சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிறைவேற்றி தேசிய ஐக்கியத்தை சாத்தியப்படுத்த முடியுமா?

இராணுவம் சூழ்ந்த வாழ்க்கை (பட உதவி: Reuters )

ஆடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்டு போராட முடியாத ஒரு சமூகத்திற்குள், தனது அதிகாரத்திற்கு சவால் விடுக்க முடியாது என்பதை மியன்மார் இராணுவம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

சுதந்திர மியன்மாரின் ஏழு தசாப்தகால வரலாற்றில், ஜனநாயக ஆட்சி நிர்வாக முறையொன்றை ஸ்தாபித்து, அதன் கீழ் மக்களை ஐக்கியப்படுத்தும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆந்தப் போராட்டங்கள் இன்று வரையிலும் வெற்றி பெறவில்லை.

எனினும், கடந்த கால அனுபவங்களில் இருந்து மியன்மார் மக்கள் கற்றுக் கொண்டுள்ளார்கள். தமது தேசத்தில் சமாதானத்தையும், தனிமனித சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தக்கூடிய ஒரே வழி உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகும் என்பதை மாற்றுக் கருத்தாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளக்கூடிய பின்புலம் உருவாகியுள்ளது.

இராணுவ சர்வாதிகாரமும், மனித உரிமை மீறல்களும் மக்கள் மத்தியில் அயர்ச்சியையும் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இராணுவம் கோலோச்சும் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பிற்குள் மக்களும் படைவீரர்களும் ஐக்கியப்பட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு சுதந்திர தேசத்தை திறந்த சிறைக்கூடமாக மாற்றிய இராணுவ ஆட்சி தமக்குப் பிடிக்கவில்லை என்பதை மக்கள் வாக்குகள் மூலம் மீண்டும் உறுதிபட கூறியிருக்கிறார்கள்.

தமது எதிர்காலம் வெளியே இல்லை. மியன்மார் சமூகத்தில் தான் தங்கியிருக்கிறது என்பதை ரொஹிஞ்ஜிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தவர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இத்தகைய பின்புலத்தில், மியன்மார் மக்கள் இராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுவார்களெனின், அந்த கிளர்ச்சிக்கு உதவி செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை.

இந்தக் கிளர்ச்சியின் நோக்கம், ஆங் சான் சூக்கியின் விடுதலை என்பதல்ல. மாறாக, சமத்துவம், சுயாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலானது என்பதை புரிந்து கொண்டு, அதனை நிறைவேற்ற உதவி செய்வதும் சர்வதேச சமூகத்தின் கடமை என்பதையே இப்போதைக்கு கூறக்கூடியதாக இருக்கிறது.

2021 பெப்ரவரி 14ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமான கட்டுரையின் இணைய வடிவம்

இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்

ஊரறிந்த வழக்கும் உலகப் பஞ்சாயத்தும் மியன்மார்

ஒரு சமாதான தேவதையின் சுயரூபம்

ஜல சமாதிகளாக மாறும் கடல்களும் மனிதாபிமானத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்றுக்களும்

About sadeeshkrishnapillai

A radio journalist who works for state radio of Sri Lanka. Much interested in sharing what I learned on world affairs through a political analytical column of a largest selling Tamil weekly in the island.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Responses to மியன்மாரில் ஜனநாயகம்: மாயையா? யதார்த்தமா?

  1. Nadarajah Nanthaaa சொல்கிறார்:

    Nice

    Like

பின்னூட்டமொன்றை இடுக